Tuesday 19 April 2011

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு!


மனம் இருந்தால் மார்க்கம் உண்டு!
உடனடி கோவம் , மனத் தளர்ச்சி, வேதனை என இன்றைய இளைய சமுதாயம் வாழ்க்கையில் ஏற்படும் சிறு சிறு பின்னடைவுகளால் தங்களின் உள்ளுணர்வுகளை வெளிபடுத்துகின்றனர்.  இது அவர்களை மட்டும் பாதிப்பதில்லை அவர்களை சுற்றி உள்ளவர்களையும் பாதிப்புக்குள்ளாக்கிறது என்றால் அது சற்றும் மிகையாகாது. 
          தோல்வியை கண்டு அஞ்சி நடுங்கும் இவர்களுக்கு அதிகம் இவரை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  வேதனைக்கும், துன்பத்துக்கும் இவரை மிகவும் பிடிக்கும், இருந்தும் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி இன்று உலக அரங்கில் ஒரு எடுத்துகாட்டாக விளங்குகிறார் ஜெசிக்கா காக்ஸ்.
        கேளிக்கைகளுக்கு அதிகம் முக்கியத்துவம் தரும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு இவரை பற்றி தெரிந்திருக்க வாய்பில்லை.  27 வயது பெண்மணியான இவர் தான் உலகிலேயே முதன் முறையாக இரு கைகள் இன்றி வெறும் கால்களினாலே  வானூர்தியை ஓட்டிச் சென்ற விமானி ஆவார்.  
பிறப்பிலேயே இரு கைகள் இன்றி பிறந்த ஜெசிக்கா ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்.  அப்பா இசை கச்சேரிகளை நடத்தும் பேண்ட் வாத்தியக்காரர். முதலில் பிள்ளையை பார்த்த அதிர்ச்சியில் உறைந்து போன இவரது பெற்றோர்கள், ஜெசிக்காவை பல மருத்துவர்களிடம் கொண்டு சென்றனர், தங்கள் மகள் இவ்வாறு பிறந்ததற்கான காரணத்தை அறிய முயன்று, ஜெசிகாவிற்கு கைகள் வர சாத்தியமா என்று கூட முயற்சித்தனர்.  அனால் அனைவரும் இயலாது என கூறிய போதும் மனம் தளராமல், அவளது தாய் ஜெசிக்காவை மற்ற குழந்தைகளை போல் விளையாட பழக்கினார்.  பொம்மைகளை கொண்டு கால்களினால் விளையாட துவங்கியவர், சீருடர் பயிற்சி, நீச்சல் , என அனைத்திலும் கற்றுத தேர்ந்தார். மனித அறிவியல் பற்றிய படிப்பான சைகோலஜியில் பட்டம் பெற்றவர், கொரியா வகை  சண்டையான டே வான் டோ வில் கருப்பு பட்டயத்தை பெற்றவராவார்.          படிக்கும் போதே வானூர்தியில் ஓட்டுனராக பறக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டவர் அதற்கான முயற்சியிலும் இறங்கினார். ஆரம்பத்தில் இவருக்கு வானூர்தி பயிற்சி அளித்தவர், சற்று நம்பிக்கை இல்லாமல் இருந்த போதும், அருமையாக வானூர்தியை வானில் ஏற்றும் மற்றும் இறக்கும் முறையை அழகாக கையாண்டு பயிற்சியாளரின் பாராட்டை பெற்றார்.  
சாதாரணமாக இது போன்ற பயிற்ச்சிக்கு ஆறு மாதங்கள் பிடிக்கும் என்றால், ஜெசிக்காவிற்கு மூன்று வருடங்கள் ஆனது. 
         அவரது கடினமான உழைப்பு, தன்னம்பிக்கை, துணிச்சல் என அனைத்தும் அவருக்கு 25 வது பிறந்த நாள் பரிசாக வானூர்தி ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்டது. இதன் மூலம் உலகில் இரு கைகள் இன்றி வானில் வானூர்தியை ஓட்டிச் சென்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றார்.  இவரது இந்த வருகை உலகையே திரும்பி பார்க்கச் செய்தது இன்று உலகையே சுற்றி வரும் ஜெசிக்கா, மற்ற பெண்களை போல் உணவு சமைக்க முடியும், உண்ண முடியும் மகிழுந்து ஓட்ட முடியும், என அனைத்து வேலைகளையும் எளிதாக செய்து வருகிறார்.  
எல்லாம் இருந்தும் சிறு சிறு துயரத்துக்கு தங்களையும் துயரப்படுத்தி மற்றவர்களையும் வேதனைக்கு உள்ளாக்கும் இன்றைய இளைய தலை முறையினருக்கு, ஜெசிக்காவின் மனம் தளராத எண்ணமும், தன்னம்பிக்கையும், முடியும் என்ற நேர்த்தியான சிந்தனையும்  சிறந்த எடுத்துகாட்டு என்பதில் ஒரு துளியும் பொய்யல்ல.
                                                                                        - ம.க.அருண் பிரசாத் 

4 comments: